Thursday, October 7, 2010

இன்று மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்

 அக்டோபர் 07,2010

இன்று மகாளய அமாவாசையை யொட்டி வேதாரண்யம் கடலில் பக்தர்கள் புனித நீராடினர். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மறந்தவர்களுக்கு மகாளயம் என்று போற்றப்படுவது மகாளய அமாவாசை ஆகும். மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசைகளில் திதி கொடுத்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம் ஆகும். இப்படி திதி கொடுப்பதால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.

முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்து அல்லது முடியாமல் போனால் மகாளய அமாவாசையில் திதி கொடுத்தால் அனைத்து அமாவாசைகளிலும் திதி கொடுத்த பலன் கிடைக்கும். இப்படி சிறப்பு பெற்ற மகாளய அமாவாசையையொட்டி இன்று கடல், ஆறுகளில் பக்தர்கள் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

சென்னை :  மகாளய அமாவாசையை ஒட்டி, இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, வழிபாடு செய்யப்படுகிறது. புரட்டாசி மாதம் பவுர்ணமி முதல் அமாவாசை வரும் 15 நாட்களும் மகாளயபட்ச காலம். இந்த நாட்களில், அந்தந்த திதிக்கு உரிய, தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் வழக்கம் இந்துக்கள் மத்தியில் உள்ளது.

அதிலும் மகாளயபட்சத்தின் இறுதி நாளான மகாளய அமாவாசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.அந்த வகையில், மகாளய அமாவாசை தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாள். மகாளய அமாவாசையை ஒட்டி, இன்று கடற்கரை, ஆறு போன்ற இடங்களில், புனித நீராடியும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபாடு செய்வர். கோவில்களுக்கு சென்றும் வழிபாடு நடத்துவர். பசுவிற்கு அகத்திக்கீரை, உணவு கொடுத்தும் வழிபாடு நடத்துவது உகந்தது.  இதனால், இன்று ஏராளமான பொதுமக்கள், புனித தலங்களில் முன்னோர் வழிபாடு நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://img1.dinamalar.com/kovilimages/news/TN_111611000000.jpg


இதைக் குறித்து  நான் ஏற்று சேவிக்கும் குருபஹ‌வான் ஆன மகாபிரபுவான இயேசுவானவர் கூறுவதென்ன என்று ஆராய்ந்தேன்; பின்வரும் வேதப்பகுதியில் அதைக் குறித்து சில காரியங்கள் கிடைத்தது; அந்த வேதப்பகுதியை வாசித்தபிறகு எனது கருத்தை முன்வைக்கிறேன்.

"எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.

நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி,

அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்;

நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்." (மாற்கு.7:10 ‍ முதல்13 வசனங்கள்)
 
மேற்காணும் வேத வாக்கியங்களின்படி நாம் அறிவதென்ன, நீண்ட நெடுங்காலமாக முன்னோர்க்கு மரியாதை செய்வதும் அவர்கள் காலத்துக்குப் பிறகும் அவர்கள் நினைவைப் போற்றி தர்ப்பணம் செய்வதும் நமது கலாச்சாரத்தில் இருக்கிறது என்பது வெளிப்படையானது;

ஆனாலும் இந்த தர்ப்பணம் செய்வதின் உண்மையான பொருள் என்ன‌?
ஐதீகம் என்று விலகிச் சென்று விடாமல் நின்று யோசித்தால் சில உண்மைகள் வெளிப்படும்;

தர்ப்பணம் செய்வதின் மூலம் முன்னோர்களுக்கு மரியாதை செய்வது போலத் தோன்றினாலும் அவர்களுடைய நல்வினை தீவினையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதே மைய நோக்கமாக இருக்கிறது;

ஏனெனில் நம்முடைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பல காரியங்களை மூடநம்பிக்கை என்று நம்முடைய சமுதாயம் சொன்னாலும் மாறாத வேத சத்தியங்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதே நிதர்சனமான உண்மையாகும்;

அதாவது நம்மைப் பெற்ற தாயோ தகப்பனோ அவர்கள் நம்முடன் வாழும் காலத்தில் நாம் எவ்வளவுதான் அவர்களைத் திருப்திபடுத்த முயற்சித்தாலும் அவர்களுக்கு நம்முடைய‌ சிறுவயதிலிருந்தே நம்மீது பல வருத்தங்கள் இருந்திருக்கும்;மேலும் அவர்களது இறுதிக்காலத்தில் நாம் அவர்களுக்கு செய்யத்தவறிய சில புண்ணியங்களும் இருந்திருக்கும்;அந்த கணக்கைத் தீர்த்துக் கொள்ளும் பரிகாரப் பூஜையாகவே இந்த மகாளய அமாவாசை தர்ப்பணம் விளங்குகிறது;

குருபஹ‌வான் இதையே கண்டிக்கிறார்;நீ உன் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் அதற்கு இணையாக வேறு ஏதோ ஒரு சடங்கை செய்துகொண்டிருக்கிறாய் என்கிறார்;ஏனெனில் பெற்றோரை கனம்பண்ணுவது பத்து கட்டளைகளில் பிரதானமானதாம்;

"பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது."(எபேசியர்.6:1,2,3)
மேலும் இந்த தர்ப்பண பூஜையின் மற்றொரு விசேஷம் முன்னோர் தம் நல்வினை தீவினை நம்மை பாதிக்கக்கூடாது என்ற சுயநலமாகும்;இவ்வுலகைவிட்டு கடந்து செல்லும் ஆன்மாக்கள் சாந்தியடையாவிட்டால் மீண்டும் நம் வீடுகளுக்கு வந்து தீமை செய்துவிடுமோ என்ற அச்சத்தினால் அவர்களை பரகதிக்குள் இங்கிருந்து முயற்சித்து தள்ளுவது போன்ற நிகழ்ச்சியே இது;

அப்படியானால் முன்னோரின் நல்வினை தீவினை அவர்தம் பின்னடியாரை பாதிக்கும் என்ற உண்மையையும் நாம் அறிகிறோம்;நல்வினை நம்மை அடைந்தால் ரொம்ப சந்தோஷம்;ஆனால் தீவினையைத் தவிர்க்க என்ன செய்வது? அவர்களுக்கும் நமக்குமான உறவை அறுத்துவிடுவது தான் ஒரே வழி;அந்த நிகழ்ச்சியே இந்த தர்ப்பணம்.

இதன்மூலம் ஒரு மனுஷன் என்ன சொல்லுகிறான்,என்னுடைய நல்வினை தீவினையின் பலனை நான் கவனித்துக் கொள்ளுகிறேன்;நீ என் வாழ்க்கையில் குறுக்கிடாதே,நீ வைகுண்டத்துக்குச் சென்று ஓய்வெடு" என்கிறான்;

அப்படியானால் நமக்கு அருமையான உறவுகளையே குட்டிசாத்தான்களாக்கி காசுபார்க்கும் போலி சாமியார்களின் சூழ்ச்சியை நாம் புரிந்துக்கொண்டு இந்த எல்லா கர்மங்களையும் தம்முடைய மாசற்ற இரத்தத்தால் பரிகரித்த குருபஹவான் இயேசுவையே சரணடையவேண்டும்; அமாவாசை இருளில் முணுமுணுவென்று எதையோ ஓதாமல் வெளிச்சத்துக்கு வர ப்ரஜாபதி அன்புடன் அழைக்கிறார்.

"அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்."(1யோவான்.1:7)

6 comments:

Anonymous said...

அது என்ன தர்ப்பணம்? நாம் அந்தணர்க்கு கொடுக்கும் பண்டங்கள் நமது முன்னோர்களுக்குப் போய்ச்சேருவதாக அர்த்தமா? என் தாத்தா என்னைச் சிறுவயதில் நன்றாக அடிப்பார். இப்பொழுது நான் அவரை அடிக்க விரும்பினால் அந்தணர்களை அடித்தால் என் தாத்தாவிற்குப் போய்ச் சேருமா?

சிரிக்கவும் சிந்திக்கவும் அருமையான கருத்துகள்...

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=13163

தனபால் said...

கிலாடி அவர்களே,

உங்களின் இந்தப் பதிவு இந்த அமாவாசை தர்ப்பணம் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாததைக் காட்டுகிறது.

///தர்ப்பணம் செய்வதின் மூலம் முன்னோர்களுக்கு மரியாதை செய்வது போலத் தோன்றினாலும் அவர்களுடைய நல்வினை தீவினையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதே மைய நோக்கமாக இருக்கிறது. ///

இப்படி எந்த வேதத்தில் எந்த சாஸ்திரத்தில் உள்ளது.? உங்களுக்கு அமாவசை தர்ப்பணத்தின் அர்த்தம் தெரியாவிட்டால் அது சம்பந்தமான புத்தகங்களைப் படியுங்கள், (மிகக் குறைவாக ஐந்து ரூபாய்க்குக் கூடக் கிடைக்கிறது).அல்லது சாஸ்திரங்கள கற்றவரை அணுகி கேட்டு விளக்கம் பெறுங்கள்.தர்ப்பணம் செய்வதே முன்னோர்களின் நல்வினை,தீவினையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வதர்க்கே என எந்த சாஸ்திரமும் கூறவில்லை.தர்ப்பணம் செய்வது இறந்தவருக்கு நாம் உணவையும், நீரையும், வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் ஆன்ம சாந்திக்காகவும் செய்யப்படுவது , இதன் மூலம் இறந்தவர்கள் சந்தோசமடைவார்கள் என்பதே ஐதீகம்.

///குருபஹ‌வான் இதையே கண்டிக்கிறார்;///

முதலில் இந்த குருபஹ‌வான் என்ற வார்த்தைக்கு வருகிறேன்.இந்துக்கள் கடவுளை,பல உறவு முறைகளில் தந்தையாக, தாயாக, குருவாக, நண்பனாக, காதாலனாக வணங்குவதை விமர்சித்து இறைவனை தந்தையாக மட்டுமே பார்க்க வேண்டும் மற்ற உறவு முறைகளில் வணங்குவது பைபிளுக்கு எதிரானது என்று கிருஸ்தவ ஊழியர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.நீங்கள் இயேசுவை குருபஹ‌வான் என்று இந்துக்களின் தேவ- வேத மொழியான சமஸ்கிருதத்தில் அழைப்பது எனக்கு மகிழ்ச்சியே.அப்படி என்றால் இயேசுவை குருவாக வணங்கத்துவங்கிவிடீர்களா? குருபஹ‌வான் என்றால் சிவனின் அம்சமான, வியாழன் கிரகத்திற்கு அதிபதியான, தக்ஷிணாமூர்த்தி ஆகும்.நீங்கள் தக்ஷிணாமூர்த்திக்கு இயேசுவை இணைவைப்பதாகக் கருதலாமா? அப்படி என்றால் சிவனின் பல அம்சங்களில் ஒன்றாக இயேசு கிருஸ்துவை கருதுகிறீர்களா???

///நீ உன் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் அதற்கு இணையாக வேறு ஏதோ ஒரு சடங்கை செய்துகொண்டிருக்கிறாய் என்கிறார்;ஏனெனில் பெற்றோரை கனம்பண்ணுவது பத்து கட்டளைகளில் பிரதானமானதாம்;///

பைபிள் பெற்றோரை கணம் பண்ணத்தான் சொல்கிறது. ஆனால் இந்து மதமோ கடவுளுக்கு இணையாகவே தாய் தந்தையரை வைத்து போற்றி பணிவிடை செய்யச் சொல்கிறது. பெற்றோரையும்,விருந்தினர்களையும், கடவுளாகவே பாவித்து பணிவிடை செய்ய வேண்டும் என்று சொல்கிறது.உலகில் எந்த மதமாவது பெற்றோரை கடவுளுக்கு ஒப்பாக கூறியதுண்டா??? பெற்றோரை வணங்கி அவர்களுக்கு பணிவிடை செய்பவனுக்கு எந்தக் கடவுளையும் வணங்காமலேயே மோட்சம் கிடைக்கும் என்று இந்து மதம் கூறுகிறது.அதனால் அவன் பெற்றோர் இருக்கும் போதும் பணிவிடை செய்யச் சொல்கிறது ,இறந்த பின்னும் அவர்களுக்காக சடங்குகளைச் செய்யச் சொல்கிறது.

///அமாவாசை இருளில் முணுமுணுவென்று எதையோ ஓதாமல் வெளிச்சத்துக்கு வர ப்ரஜாபதி அன்புடன் அழைக்கிறார்.///

இந்தப் ப்ரஜாபதி என்பவர் யார்??? இயேசு கிறிஸ்துவா? கர்த்தரா? கூறுங்கள். இந்தப் ப்ரஜாபதிக்கு மனைவிகள், மற்றும் பல குழந்தைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா??? முதலில் இந்தப் பிரஜாபதி பற்றி உங்கள் விளக்கம் என்ன? என்று கூறுங்கள். பிறகு விவாதிக்கலாம்.

தனபால் said...

கிலாடி அவர்களே,

பிரம்ம தேவனிடமிருந்து முதலில் தோன்றிய ரிஷிகளே, ப்ரஜாபதிகள் என்றழைக்கப்படுகிறார்கள். பிரம்ம தேவனிடமிருந்து ஆதியில் 9 ப்ரஜாபதிகள் (ரிஷிகள் ) தோற்றுவிக்கப்பட்டார்கள்.

ஆம் பிரஜாபதி ஒருவரல்ல!!!ஒன்பது பேர்!!!.அவர்கள் நவ ப்ரஜாபதிகள் என்றழைக்கப்பட்டார்கள்.அவர்கள் பிரம்மனிடமிருந்து தோன்றியதால் பிரம்ம புத்திரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அவர்கள் ப்ருகு, புலஸ்தியர், புலஹர், க்ரது, அங்கிரஸ், மரிஷி, தக்ஷன், அத்ரி, வஷிஸ்டர் இவர்களே அந்த ஒன்பது ப்ரஜாபதிகள்.

அந்த 9 ப்ரஜாபதிகளுக்கும் ஒவ்வொரு மனைவிமார்கள் உண்டு.அவர்கள் க்யாதி, பூதி, சம்பூதி, க்ஷமா, ப்ரீதி, ஷன்நதி, ஊர்ஜா, அனசுயா, ப்ரஹூதி என்பவர்களாவர்.

நீங்கள் கூறும் பிரஜாபதி யார்? என்று கூறுங்கள்.அவரின் மனைவியின் பெயரையும் அவர்களின் குழந்தைகளின் எண்ணிக்கையையும், பெயர்களையும் கூறுகிறேன்.

chillsam said...

நேத்து ராத்திரி யம்மா..!

http://chillsam.wordpress.com/2010/10/10/hindu-festivals/

தனபால் said...

நான் ப்ரஜாபதியைப் பற்றிக் மேலே கூறியவை விஸ்ணு புராணத்தில் வருபவை.ப்ரஜாபதியைப் பற்றி யஜூர் வேத தைத்திரீய உபநிஷத்தில் சொல்லப்பட்டவை இங்கே,

இன்பத்தின் அளவீட்டைப் பார்ப்போம்.நல்ல, வாலிப மிடுக்கு உடைய, அறிவாளியான, சுயக்கட்டுப்பாடுடைய, மன உறுதிகொண்ட, பலசாலியான இளைஞன் ஒருவனை அளவுகோலாகக் கொள்வோம்.அத்தகையதோர் இளைஞனுக்கு எல்லாவிதமான செல்வங்களாலும் நிறைந்த, இந்த பூமி உரியதாக வைத்துக்கொள்வோம்.அந்த இளைஞன் பெரும் இன்பம் ஒரு மனித இன்பம்.அத்தகைய நூறு மனித இன்பங்கள் சேர்ந்தால் ஒரு மனித -கந்தர்வ இன்பம்.ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான். _யஜூர் வேதம், தைத்திரீய உபநிஷத்_சுலோகம்: 2 :9 .1.

நூறு மனித -கந்தர்வ இன்பங்கள் சேர்ந்தால் ஒரு தேவ – கந்தர்வ இன்பம்.ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான். _யஜூர் வேதம், தைத்திரீய உபநிஷத்_சுலோகம்: 2 :9 .2.

இப்படியாக இன்பங்களை அளவிடும் போது…..

“நூறு பிரஜாபதி இன்பங்கள் ஒரு பிரம்ம இன்பம்.ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.”_யஜூர் வேதம், தைத்திரீய உபநிஷத்_சுலோகம்: 2 :9 .10 .

இதிலிருந்து பிரம்மன் என்னும் படைப்புக் கடவுள் 100 பிரஜாபதிக்குச் சமம், என்பது நம் வேத – உபநிஷத்துகளிலிருந்து மிகத் தெளிவாகிறது.

சில கிருஸ்தவர்கள் கர்த்தராகிய இயேசு கிருஸ்துவை பிரஜாபதி என்று அழைக்கிறார்கள்.அதாவது பிரம்மாவின் மூலம் படைக்கப்பட்ட, பிரம்மாவின் நூறில் ஒருபங்காகிய, மனைவி, மற்றும் குழந்தைகள் கொண்ட , பிரஜாபதியான, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று இதற்குப் பொருள் படுகிறது.அதனால் அவர்கள் கர்த்தரையோ, இயேசு கிருஸ்துவையோ பிரஜாபதி என்று அழைத்தால் அழைத்துக்கொள்ளட்டும்.ஆனால் இதை பைபிள் அனுமதிக்கிறதா??? கர்த்தராகிய இயேசு கிருஸ்துவை பிரஜாபதி என்று அழைக்க பைபிளில் கூறியிருக்கிறதா???

இது தான் சொந்த செலவில் தனக்கே சூனியம் வைப்பது என்பதா? இந்த சூனியம் வைத்தவர் சாது செல்லப்பா.அவராவது பதிலளிப்பாரா?

christianbrahmin said...

அண்ணன் தனபால் அவர்களுக்கு, தங்களது வாதத்துக்குட்பட்ட நிலையில் எனது கருத்துக்களை ஒரு தனி கட்டுரையாக பதித்திருக்கிறேன்;

// " ப்ரஜாபதி" யார்..? //
http://christianbrahmin.blogspot.com/2010/10/blog-post_12.html

மற்றபடி தாங்கள் குறிப்பிடும் வண்ணமாக இயேசுவை வேதம் 'ப்ரஜாபதி' என்று அழைக்கவில்லை; ஆனால் 'உலக இரட்சகர் ' என்றும் 'தமது ஜனத்தின் பாவத்தை சுமந்து தீர்ப்பவர் ' என்றும் அழைக்கிறது;

இதன் மூலப் பொருளும் " ப்ரஜாபதி " என்ற தனிப்பட்ட சொல்லின் பொருளும் அதாவது அர்த்தமும் ஒன்றாக இருப்பது மட்டுமே கிறித்தவர்கள் இயேசுவை " ப்ரஜாபதி " என்றழைக்கக் காரணமானது;

நான் அவரை "ப்ரஜாபதி "யாக பார்த்து அடையவில்லை; அவரை "முருகன்" என்றோ "மூர்த்தி " என்றோ அழைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்;ஏனெனில் அதுவே எமது இஷ்ட தெய்வமாக இருந்தது.

"முருகன்" என்ற வார்த்தையின் படி அவர் அழகானவர்,அவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் என வேதம் புகழுகிறது;

அவர் "மூர்த்தி"யுமாவார்; காரணம், அவரைக் கொண்டே உலகங்கள் உண்டாக்கப்பட்டது என்றும் வேதம் கூறுகிறது.

முருகனுக்கும் மூர்த்திக்கும் உருவம் கற்பித்து கதைகளைப் புனைந்துவிட்டதால் அந்த குறிப்பிட்ட வார்த்தையானது ஒருவரை மட்டுமே குறிப்பதாகக் கொள்ளலாகாது.

Post a Comment